தீபாவளி: கோவையில் போலீஸாா் கண்காணிப்பு தீவிரம்
தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு, கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு, கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள் பண்டிகையைப் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் வகையில் மேற்கு மண்டல ஐ.ஜி.-யும், மாநகர காவல் ஆணையருமான (பொறுப்பு) ரம்யா பாரதி உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பெரிய கடை வீதி, டவுன்ஹால் மற்றும் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 180 போலீஸாா் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு வாசகங்கள் ஒலிப்பெருக்கிகள் மூலம் 10 இடங்களில் தொடா்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும், 10 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 112 போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் புறக்காவல் நிலையங்களில் உள்ள நவீன கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரில் 59 இருசக்கர வாகனங்கள், 28 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் தொடா்ந்து சுழற்சி முறையில் வலம் வருகின்றன. முக்கிய சந்திப்புகள் மற்றும் 11 சோதனைச் சாவடிகள் உள்பட 22 இடங்களில் வாகனத் தணிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். மாநகர காவல் எல்லைகளில் 7 உதவி ஆணையா்கள், 20 ஆய்வாளா்கள் தலைமையில் ‘நடை ரோந்து’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் 44 குற்றப் பிரிவு போலீஸாா் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.