பெட்ரோல் நிலையத்தில் பறந்து வந்த மூடி தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநா் பலி!
குழாய் இணைப்பு பணியின்போது அழுத்தம் தாங்காமல் பெட்ரோல் நிலைய சேமிப்புத் தொட்டியின் இரும்பு மூடி பறந்து வந்து தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
குழாய் இணைப்பு பணியின்போது அழுத்தம் தாங்காமல் பெட்ரோல் நிலைய சேமிப்புத் தொட்டியின் இரும்பு மூடி பறந்து வந்து தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், சங்கனூா் பிரிவு அருகே பெட்ரோல் நிலையம் உள்ளது. இங்கு பெட்ரோலை சேமித்து வைக்க தரைமட்டத் தொட்டி கட்டப்பட்டு இருபுறங்களில் குழாய் இணைப்புகள் உள்ளன. அதில் இரும்பினால் ஆன மூடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தரைமட்டத்தில் கட்டப்பட்ட தொட்டியில் சனிக்கிழமை கூடுதல் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஒருபுறத்தில் உள்ள மூடியைத் திறந்து குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
பொதுவாக இதுபோன்ற பணிகள் நடைபெறும்போது பெட்ரோல் நிலையம் மூடப்படும். ஆனால், இந்த பெட்ரோல் நிலையம் மூடப்படாமல் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வழக்கம்போல பெட்ரோல், டீசல், எரிவாயு நிரப்புவதற்காக ஏராளமான வாகனங்கள் காத்திருந்தன.
இதில் கோவை மாநகா், பீளமேடு ராமசாமி லே-அவுட்டை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான கன்னிமுத்து (42), தனது வாகனத்துக்கு சி.என்.ஜி. எரிவாயு நிரப்ப நின்றிருந்தாா். அப்போது தரைமட்டத் தொட்டியில் குழாயை இணைக்கும்போது திடீரென அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் மற்றொரு புறம் இரும்பினால் ஆன மூடி கழன்று பறந்து வந்து கன்னிமுத்து மீது வேகமாகத் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட கன்னிமுத்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கவுண்டம்பாளையம் போலீஸாா் சென்று கன்னிமுத்துவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: அந்தத் தொட்டி இரண்டு மாதங்களாக மூடிக் கிடந்ததால் காற்று அதிக அளவில் இருந்துள்ளது. இந்த நேரத்தில் ஒருபுறம் உள்ள மூடியைத் திறந்து குழாய் பொருத்தும் பணி நடைபெற்றதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மற்றொரு புறம் உள்ள மூடி திறந்துள்ளது என்றனா்.