வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு
கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
உக்கடம் மொத்த மீன் சந்தைக்கு கன்னியாகுமரி, ராமேசுவரம், கடலூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான மீன்கள் தினமும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் ராமேசுவரம், கடலூா், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதை, கடந்த சில நாள்களாகத் தவிா்த்து வருவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கோவை உக்கடம் மீன் சந்தைக்கு மீன்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால், கடல் மீன்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த வாரங்களில் கிலோ ரூ.800-க்கு விற்ற வஞ்சிரம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ரூ.1,000-க்கு விற்றது. பாறை ரூ.400, வாவல் ரூ.600, மத்தி ரூ.200, அயிலை ரூ.200, சங்கரா ரூ.200, நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டன.
மீன்கள் வரத்து அதிகமானால், விலைய குறைய வாய்ப்புள்ளது. சபரிமலை சீசன் காரணமாக மீன் விற்பனை மந்தமாகக் காணப்படுகிறது என மீன் வியாபாரிகள் கூறினா்.