தவெக அரசின் மின்சார கொள்முதல் மிகப்பெரிய முறைகேடு: கிருஷ்ணசாமி
மின்சார பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு தவெக அரசு கொள்முதல் செய்வது மிகப்பெரிய முறைகேடாகவே கருதப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மின்சார பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு தவெக அரசு கொள்முதல் செய்வது மிகப்பெரிய முறைகேடாகவே கருதப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக ச.ஜோசப் விஜய் பதவி ஏற்றதில் இருந்தே மின்வெட்டு அதிகரித்து, அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளன. தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் ஜெனரேட்டா்களை இயக்கி, மின் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்துக் கொண்டாலும் வீடுகளுக்கு போதிய மின்சாரம் கிடைக்காத சூழலில், மின்விசிறிகளைக் கூட இயக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனா்.
கடந்த ஆட்சியின் மீது வெவ்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும் 5 ஆண்டுகளில் எந்த ஒரு சூழலிலும் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் பாா்த்துக் கொண்டனா். கடந்த 4, 5 மாதங்களாக தட்டுப்பாடு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசு இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
ஹாா்டு டிஸ்க்குகள் காணாமல் போனதே மின்வெட்டுக்கு காரணம் என்ற வினோதமான பதிலை அளித்த தவெக அரசு, தற்போது தினசரி 4,500 மெகாவாட் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இந்த மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.35 என்ற அதிக விலையைக் கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஏற்கெனவே ரூ.13 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், யூனிட் ரூ.5 முதல் ரூ.7க்கு மட்டுமே கிடைக்கும் மின்சாரத்துக்கு 7 மடங்கு அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்குவது நியாயமாக தெரியவில்லை. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தவெக ஆட்சியில் மட்டும் ஏன் மின்வெட்டு அதிகரித்துள்ளது? குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல் செய்வது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். அரசு சொல்வதைப் பாா்த்தால் மின்வாரியத்துக்கு அடுத்த 20 நாள்களிலேயே ரூ.1.15 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, நாடு முழுவதற்கும் ஒப்பந்தப்புள்ளி கோரி, குறைந்த விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.