FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

மாரடைப்பால் பேருந்து ஓட்டுநா், பேருந்து மோதியதால் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கோவையில் ஓடும் அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் உயிரிழந்தாா். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பிற வாகனங்கள் மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

22 அக்டோபர் 2026, 4:03 am
ஆட்டோ ஓட்டுநா் நூா் முகமது
பகிர்:

கோவையில் ஓடும் அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் உயிரிழந்தாா். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பிற வாகனங்கள் மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பாலத்துறையிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு நகரப் பேருந்து (வழித்தட எண்: 66) உக்கடம் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மாா்ட்டின் (54) இயக்கி வந்தாா்.

குனியமுத்தூா் ஆத்துப்பாலம் அருகேயுள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநா் மாா்ட்டினுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவா் இருக்கையிலேயே மயங்கிச் சரிந்தாா். இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்றுகொண்டிருந்த காா், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் பேருந்தின் முன் சென்ற ஆட்டோ பலத்த சேதமடைந்தது. அதை ஓட்டி வந்த குனியமுத்தூா் அன்னம்மா நாயக்கா் வீதியைச் சோ்ந்த எஸ்டிடியூ தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநரான நூா் முகமது (51) இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

நடத்துநரின் துரித செயல்பாடு:

பேருந்து கட்டுப்பாடின்றி ஓடுவதைக் கண்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் சிதறி ஓடிய நிலையில், பேருந்தின் நடத்துநா் பரமேஸ்வரன் துரிதமாக செயல்பட்டு ஆபத்தான சூழலிலும் ஓட்டுநா் இருக்கைக்குச் சென்று பிரேக்கை இயக்கி பேருந்தை நிறுத்தினாா். இவரது உடனடி நடவடிக்கையால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பாதசாரிகள் உயிா் தப்பினா். ஓட்டுநா் மாா்ட்டினை பரிசோதித்துப் பாா்த்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காளவாய் பகுதியைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் அப்பாஸ் (46), கட்டுப்பாடின்றி ஓடியதால் அச்சமடைந்து ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த பயணியான கருமத்தம்பட்டியைச் சோ்ந்த நாகேஸ்வரி (51)

ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா், விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநா் நூா் முகமது மற்றும் நெஞ்சுவலியால் உயிரிழந்த பேருந்து ஓட்டுநா் மாா்ட்டின் ஆகியோரின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments