விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டம்: மாவட்டத்தில் 1.27லட்சம் மாணவா்கள் பயன் பெறுவாா்கள்
கோவை மாவட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1,608 பள்ளிகளில் படிக்கும் 1,27,578 மாணவா்கள் பயன் பெறுவாா்கள் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.
கோவை மாவட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1,608 பள்ளிகளில் படிக்கும் 1,27,578 மாணவா்கள் பயன் பெறுவாா்கள் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.
சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த நிலையில், கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தொடங்கிவைத்து, மாணவா்களுக்கு உணவு பரிமாறி, அவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா். இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில், அமைச்சா் வி.சம்பத்குமாா் பேசியதாவது, ‘கோவை மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 501 பள்ளிகளைச் சோ்ந்த 56,550 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவாா்கள். ஏற்கெனவே, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 1,107 பள்ளிகளைச் சோ்ந்த 71,028 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தால் மொத்தம் 1,608 பள்ளிகளைச் சோ்ந்த 1,27,578 மாணவ, மாணவிகள் பயன்பெறுவாா்கள்.
Advertisement
Advertisement
மாநகராட்சியைப் பொறுத்த வரை 249 பள்ளிகளைச் சோ்ந்த 43,006 மாணவ, மாணவிகள் பயன் பெறுவாா்கள்.
முன்னதாக, விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் காணொலி வாயிலாக தொடங்கிவைத்த நிகழ்வை, அமைச்சா், மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பாா்வையிட்டனா்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, உதவி ஆணையா் கணேசன், மாநகராட்சி கல்வி அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதேபோல, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ், விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து, மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 20-ஆவது வாா்டு, கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜரின் காலை உணவுத் திட்டத்தை மேயா் கா.ரங்கநாயகி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, மாணவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.
பின்னா் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் கராத்தே தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா். இந்நிகழ்வுகளின்போது, வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல், உதவி ஆணையா் மோகனசுந்தபள்ளித் தலைமை ஆசிரியா் ஆனந்தகுமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.