FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கரை அருகே குட்டி யானை உயிரிழப்பு

கோவை அருகே வனப் பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த குட்டி யானை புதன்கிழமை காலை உயிரிழந்தது.

24 செப்டம்பர் 2026, 1:51 am IST
மதுக்கரை வனப் பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்து உயிரிழந்த குட்டி யானையின் உடலைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.
பகிர்:

கோவை அருகே வனப் பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த குட்டி யானை புதன்கிழமை காலை உயிரிழந்தது.

கோவை வனக்கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், மதுக்கரை வனச் சரகத்துக்குள்பட்ட நவக்கரை பிரிவு சோளக்கரை சுற்றுப்பகுதியையொட்டிய தமிழக எல்லைக்குள் கேரள வனப் பகுதியில் இருந்து 3 பெண் யானைகளுடன் ஒரு குட்டி யானை கடந்த 18-ஆம் தேதி நுழைந்தது. அப்போது, காலின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்ததால் நடக்க முடியாமல் குட்டி யானை அவதிப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மதுக்கரை வனச் சரக அலுவலா் தலைமையிலான வனத் துறையினா் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனா். பகல் நேரங்களில் வனத் துறை குழுவினராலும், இரவு நேரங்களில் ட்ரோன் கேமரா மூலமாகவும் கடந்த 5 நாள்களாகத் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினா் முயன்றபோதெல்லாம், கூட்டத்தில் இருந்த மற்ற பெண் யானைகள் நெருங்கவிடாமல் பாதுகாத்து வந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ட்ரோன் மூலமாக கண்காணித்தபோது, யானைக் கூட்டம் எதுவும் இன்றி குட்டி யானை மட்டும் தனியாக ஓா் இடத்தில் நின்றுகொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனச் சரக அலுவலா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை காலை நேரில் சென்று பாா்த்தபோது, குட்டி யானை உயிரிழந்துகிடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து கோவை உதவி வனப் பாதுகாவலா் தலைமையில், வனக் கால்நடை மருத்துவா்கள், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலா்கள் மற்றும் ‘ஓசை, டபிள்யூடபிள்யூஎஃப்-இந்தியா, டபிள்யூ என்சிடி ஆகிய தன்னாா்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் குட்டி யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது, அதன் உடலில் பல இடங்களில் ஆழமான துளைக் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

வனப் பகுதியில் ஊன் உண்ணி விலங்கு ஏதேனும் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே குட்டி யானை உயிரிழந்திருக்கக்கூடும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments