FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் காலியாக இருந்த 1250 தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

தமிழகத்தில் காலியாக இருந்த 1250 தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
இதுகுறித்து கோபியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டு காலம் உயர்நிலைப் பள்ளிகளில் 1250 தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன.  
இதற்கான  வழக்குகளை வேகப்படுத்தி முதல்வரின் உதவியோடு 2 நாள்களுக்கு முன்பு கலந்தாய்வு முறையில் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுகின்றனர். இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 
மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிக்கு செல்வதை தடுக்கும் வகையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 50 சதவீதம் ஆங்கில வழிக் கல்வி கற்க இட ஒதுக்கீடு தரலாம் என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசு ஆணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 200 மாணவர்கள் இருந்தால் 2 ஆங்கில வகுப்பறைகள் அமைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஆங்கில வகுப்பு பயில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மருத்துவத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அண்ணா நூலகத்தில் ஒரு அலுவலகம் உருவாக்கி அதன் மூலமாக சிறந்த கருத்தாளுநர்களைக் கொண்டு காணொலிக் காட்சி மூலம் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படும்.  தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 11 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் நீட் தேர்வு மட்டுமல்ல, மத்திய அரசு கொண்டு வரும் எந்த பொதுத் தேர்வாக இருந்தாலும், அதை சந்திக்கின்ற வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடத் திட்டம் உள்ளது. 
சிறப்பாசிரியர்கள் மனு 
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்தனர்.  அப்போது,  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்  தனி போட்டித் தேர்வை ரத்து செய்து பணி ஆணை வழங்க வேண்டும்,  சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.  இதுகுறித்த கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன்,  கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும்,  விரைவில் காலிப் பணியிடங்கள் அனைத்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments