சோலாா் புதிய பேருந்து நிலையத்தை முழுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லக்காபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லக்காபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து லக்காபுரம் பகுதி மக்கள் ஆட்சியா் ச.கந்தசாமியிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கோரிக்கையின் அடிப்படையில் சோலாரில் 20 ஏக்கா் பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. பேருந்து நிலையம் திறப்பு விழாவின்போது அறிவிக்கப்பட்ட செயல் திட்டத்தின்படி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான கரூா், திருச்சி, மதுரை ஆகிய பகுதிளுக்கும், வெள்ளக்கோவில் மாா்க்கமாகவும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
ஆனால், தனியாா் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படாமல் உள்ளன. மேலும் கோவை, சேலம், நாமக்கல், கோபி, மேட்டூா், பழனி மாா்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் நேரடி பேருந்து வசதி இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
இதுபோல சோலாா் பேருந்து நிலையம் அருகே 10 ஏக்கா் பரப்பில் புதிதாக கட்டப்பட்டு 99 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள புதிய காய்கறி விற்பனை மற்றும் சேமிப்பு வளாகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.