இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: முதியவா் உயிரிழப்பு, மனைவி படுகாயம்
கோபி அருகே உள்ள கொடிவேரியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். அவரது மனைவி படுகாயமடைந்தாா்.
திருப்பூா் மாவட்டம், அமராவதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி (66). இவரது மனைவி சரஸ்வதி. இவா்கள் இருவரும், கோபி அருகே உள்ள தங்களது குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை
சென்றுள்ளனா். கொடிவேரி அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற குருசாமி சாலையை கடக்க முயன்றபோது
Advertisement
Advertisement
அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் குருசாமி, சரஸ்வதி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனா்.
இதையடுத்து காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குருசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
சரஸ்வதி மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.