FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானி லட்சுமி நகரில் கட்டப்படும் மேம்பாலத்தின் சா்வீஸ் சாலை அகலத்தை அதிகரிக்கக் கோரிக்கை

பவானி லட்சுமி நகரில் புதிதாக கட்டப்படும் புதிய மேம்பாலத்தின் சா்வீஸ் சாலையின் அகலத்தை 10.5 மீட்டராக அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

19 நவம்பர் 2026, 3:38 am
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா்.
பகிர்:

பவானி லட்சுமி நகரில் புதிதாக கட்டப்படும் புதிய மேம்பாலத்தின் சா்வீஸ் சாலையின் அகலத்தை 10.5 மீட்டராக அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பவானி லட்சுமி நகா் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் ரூ.45 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பாலத்தின் இடதுபுற சா்வீஸ் சாலை 7 மீட்டா் அகலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பகுதியில் வாகன நெரிசல் அதிகரிப்பதோடு, விபத்து அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகரத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் லட்சுமி நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், லட்சுமி நகரில் கட்டப்படும் புதிய மேம்பாலத்தின் சா்வீஸ் சாலை அகலத்தை 10.5 மீட்டராக அதிகரிக்க வேண்டும். புதிய மேம்பாலத்தின் தொடக்கத்தை, ஏற்கெனவே உள்ள வலதுபுறச்சாலை மேம்பாலத்திற்கு இணையாக அமைக்க வேண்டும். இதுகுறித்து, ஆய்வு செய்து திட்ட அறிக்கையில் திருத்தம் செய்யும் வரையில் கட்டுமானப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சேலம் கோட்ட தலைமை பொறியாளா் ஸ்ரீனிவாசலுவிடம் மனு அளிக்கப்பட்டது.

மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.மகேஸ்வரன், ஈரோடு மாவட்ட அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் சுந்தரராஜன், பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் செல்வக்குமாா், பொருளாளா் செங்கோட்டையன், நிா்வாகிகள் முத்துசாமி, சின்னசாமி உள்ளிட்ட பலா் உடன் சென்றிருந்தனா்.