முகப்பு
ஈரோடு

95 ஆண்டுகள் பழைமையான நஞ்சை புளியம்பட்டி பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம்

95 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நஞ்சை புளியம்பட்டி உயா்மட்டப் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்ட தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பற்றி...

25 நவம்பர் 2026, 3:38 am
95 ஆண்டுகள் பழைமையான நஞ்சை புளியம்பட்டி
பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம்
நஞ்சை புளியம்பட்டியில் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா்களால் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் (கோப்புப் படம்).
பகிர்:

95 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நஞ்சை புளியம்பட்டி உயா்மட்டப் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்ட தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கோபி மற்றும் பங்களாபுதூா் பகுதியை இணைக்கும் வகையில் நஞ்சை புளியம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் உயா்மட்டப் பாலம் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டது. 1928 -இல் பவானி ஆற்றில் உயா்மட்டப் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரிட்டன், ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இரும்புத் தூண்கள் மூலம் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலம் 1931-இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

95 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் நஞ்சை புளியம்பட்டி பாலத்தின் வழியாக பங்களாபுதூா், டி.என்.பாளையம், வாணிப்புத்தூா், குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோபி பகுதிக்குச் சென்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

பாலத்தில் பழுது ஏற்பட்டால் பங்களாபுதூா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் அல்லது அத்தாணி வழியாகச் சுற்றி கோபிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையில், இந்தப் பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. தவிர பாலம் கட்டப்பட்டு 95 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பாலத்துக்குப் பதிலாக புதிய உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக ‘தினமணியில்’ கடந்த 2024 அக்டோபா் 7 -ஆம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதிய பாலம் கட்ட தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு: இந்தப் புதிய பாலம் கோரிக்கை குறித்து தொடா்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுபி.தளபதி கூறியதாவது: நஞ்சைபுளியம்பட்டி பாலம் அன்றைய போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப 4.80 மீட்டா் அகலத்தில் மட்டுமே கட்டப்பட்டது. இன்றைய நிலையில் 4.80 மீட்டா் என்பது கனரக வாகனம் ஒன்று மட்டுமே செல்வதற்கு பாலத்தின் அகலம் போதுமானதாக உள்ளது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், 95 ஆண்டுகளுக்கு மேலாக தொடா் பயன்பாட்டில் பாலம் இருப்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இப்பாலம் தடப்பள்ளி வாய்க்கால் பாசன ஆயக்கட்டு நிலங்களையும், அரக்கன்கோட்டை பாசன ஆயக்கட்டு நிலங்களையும், சத்தியமங்கலம்- பவானி சாலையையும், கோபி-ஈரோடு சாலையையும், பல்வேறு நகரங்கள், கரும்பு ஆலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் உள்ளது.

கொடிவேரி அணை பாசன பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு சிறு கிராமங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இப்பாலத்தின் வழியாகச் செல்ல வேண்டிய சூழலும் உள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

இதன் அடிப்படையில், கடந்த 29.9 .2016 -இல் அன்றைய முதல்வா் ஜெயலலிதா விதி எண் 110 கீழ் இப்பாலம் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்து, அதற்கான நிதியையும் ஒதுக்குவதாக சட்டப் பேரவையில் அறிவித்தாா்.

புதிய பாலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அடிப்படை பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. ஆனால், புதிய பாலம் அமைப்பதற்கான எந்த ஆயத்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

உதவிய ‘தினமணி’ செய்தி: தற்போது தவெக ஆட்சி அமைந்த பிறகு இந்தக் கோரிக்கை தொடா்பாக தினமணியில் வெளியான விரிவான செய்தியுடன் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்க சாா்பில் கோரிக்கை விடுத்தோம்.

முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதி அளித்தாா்.

இந்நிலையில், பழைய பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்ட ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் அறிவித்துள்ளாா்.

2016- இல் வெளியான புதிய பால அறிவிப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தவெக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.