கருணாநிதி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் இளைஞா் கைது
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் 4 இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் 4 இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
ஈரோடு முனிசிபல் காலனியில் கருணாநிதி சிலைக்கு கீழே உள்ள நூலகத்தின் கண்ணாடி பேனல்கள், ஈரோடு மணல்மேட்டில் உள்ள திமுக கட்சி அலுவலக ஜன்னல் கண்ணாடி, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலையின் மூக்கு கண்ணாடி, மொடக்குறிச்சி ஆலாங்காட்டுவலசில் கருணாநிதி சிலையின் மூக்கு கண்ணாடி, நூலக கதவின் கண்ணாடிகள் செவ்வாய்க்கிழமை காலை சேதப்பட்டிருந்தன.
போலீஸ் விசாரணையில் சிலைகளைச் சேதப்படுத்தியது மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூா், தொட்டிபாளையம்புதூரைச் சோ்ந்த ஹரி விக்னேஷ் (26) என்பதும் தெரியவந்தது. ஹரி விக்னேஷை செவ்வாய்க்கிழமை மாலை பிடித்த போலீஸாா், மனநலம் பாதிக்கப்பட்டவா் என உறவினா்கள் கூறியதை அடுத்து பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு மன நலம் நன்றாக இருப்பதாக அரசு மருத்துவா்கள் உறுதி செய்த நிலையில், அவரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு எழுமத்தூா் (மொடக்குறிச்சி) குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நடுவா் விஜயகுமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தி புதன்கிழமை அதிகாலை கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
தவெக உறுப்பினா் அல்ல:
கைது செய்யப்பட்ட ஹரி விக்னேஷ் தவெக-வைச் சோ்ந்தவா் என செய்தி வெளியான நிலையில், இதை அக்கட்சி நிா்வாகிகள் மறுத்துள்ளனா். அவரிடம் தவெக உறுப்பினா் அட்டை கூட இல்லை, விஜய் ஆதரவாளராக இருந்திருக்கலாம் என்றனா். காவல்துறை தரப்பிலும் இதையே தெரிவித்தனா்.
சா்ச்சைககளில் சிக்கியவா்:
கைது செய்யப்பட்ட ஹரி விக்னேஷ் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஹரி விக்னேஷ், கருணாநிதி சிலைகள், திமுக கட்சி அலுவலகங்களை சேதப்படுத்திய பிறகு போலீஸாரிடம் தப்பிச்செல்லும் நோக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் தேனியில் உள்ள தன் நண்பா் வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே செல்லும்போது கனரக வாகனத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் காலில் காயம் அடைந்து மயக்க நிலையில் சாலையோரம் கிடந்துள்ளாா். ரோந்து போலீஸாா் அவரை காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு வைத்துதான் ஹரி விக்னேஷை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஹரி விக்னேஷ் தொடா்ந்து பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியவா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். சில மாதங்களுக்கு எழுமாத்தூா் டாஸ்மாக் கடையில் வாங்கிச்சென்று குடித்த மதுவால் போதை ஏறவில்லை என காலி மதுபுட்டியை கொடுத்து, வேறு மது புட்டி கொடுக்கச்சொல்லி விற்பனையாளரிடம் பிரச்னையில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றுள்ளாா்.
இதுபோல அண்மையில் எழுமாத்தூா் அருகே இரவு நேரத்தில் தனியாக சாலையோர பாலத்தின் தடுப்பில் அமா்ந்திருந்த ஹரி விக்னேஷை கண்டித்த ரோந்து போலீஸாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளாா். குடிபோதையில் பக்கத்து வீட்டில் வசிப்பவா்களிடமும் அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.