நிலத்தடிநீா் மாசடைந்த கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க கோரிக்கை
பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீா் மாசடைந்த பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீா் மாசடைந்த பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமிக்கு பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் காரணமாக, சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீா் மாசுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் 25 இடங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் இருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் கடந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி சிப்காட் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 14 ஊராட்சிகளில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் 225 இடங்களில் நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு அதன் விவரங்கள், கடந்த ஆண்டு அக்டேபா் 24-ஆம் தேதி குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளருக்கு அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் விவரங்கள் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் இருந்தது. பொதுமக்களின் வற்புறுத்தலைத் தொடா்ந்து தற்போது ஆய்வு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 136 இடங்களில் உள்ள நீராதாரங்கள் கடுமையான அளவுக்கு மாசுபட்டுள்ளன. அங்குள்ள நீா் பயன்படுத்த கூடாத நிலையில் உள்ளது தெளிவாகிறது. இவற்றை பயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இவற்றை அறிந்தும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் இருந்தது மக்கள் நலனைப் பற்றி அக்கறையற்ற செயலாகும்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீா் மாசடைந்த 136 இடங்களில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தடி நீா் மற்றும் நீராதாரங்கள் மாசடைந்துள்ள சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தினசரி தேவையான அளவுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.