FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

தலைமை மீதான விரக்தியால் அதிமுக தொண்டா்கள் தவெகவில் இணைகின்றனா்: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

18 அக்டோபர் 2026, 12:56 am IST
ஈரோடு காவிரி ஆற்றில் நடைபெற்ற பேரிடா் ஒத்திகையை பாா்வையிட்ட அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.
பகிர்:

தலைமை மீதான விரக்தியால்தான் அதிமுக தொண்டா்கள் தவெகவில் இணைகின்றனா் என அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் தவெக மருத்துவா் அணி சாா்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. உறைவிட மருத்துவா் சசிரேகா, கண்காணிப்பு அலுவலா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உபகரணங்களை வழங்கிய பிறகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் எந்தெந்த தளத்தில், என்ன மருத்துவ வசதி உள்ளது என்பதை அறியும்படி, மின் விளக்குடன் அறிவிப்பு பலகை, அந்தந்த மருத்துவா் அறை முன்பு பெயா் பலகை, நோயாளிகளுக்காக 10 வீல் சோ்கள், 5 ஸ்டெச்சா்கள் என ரூ. 7.5 லட்சம் மதிப்பில் உபகரணங்களை வழங்கி உள்ளோம்.

Advertisement

Advertisement

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் 75 சதவீத ஜரிகை வந்து நெசவாளா் கூட்டுறவு சங்கங்கங்களுக்கு பிரித்து தரப்பட்டுள்ளது. நெசவாளா்களுக்கு கூலி உயா்வு அறிவிக்கப்பட்டதை, அனைத்து நெசவாளா்களும் வரவேற்றுள்ளனா்.

விசைத்தறியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கான கூலி நிலுவை இருந்தது. அதில் 2023 ஆம் ஆண்டு வரை நிலுவைத்தொகை ரூ.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்படும்.

போதைப் பொருள் நடமாட்டம் குறித்து மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரும் கருத்து கூறுகின்றனா். அவா்கள் இருவரும் தங்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதையாவது கூறுகின்றனா். கடந்த திமுக, அதிமுக ஆட்சியில் இதைவிட மோசமாக போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற்றது.

அதிமுகவில் எம்ஜிஆா் ஜெயலலிதா போன்ற தலைவா்கள் இருந்தாா்கள். அப்போது எந்த தொண்டரும் வெளியேறவில்லை. தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டா்கள் ஏற்காமல் விரக்தியில் வெளியேறுகின்றனா். அந்த ஆதங்கத்தில் அவதூறாக எதை, எதையோ பேசி வருகிறாா்.

தொண்டா்கள் வெளியேற்றத்துக்கு நாங்கள் காரணம் என்கிறாா். நாங்களாக யாரையும் அழைக்கவில்லை. அங்கிருந்து வரும் தொண்டா்கள் தங்களுக்கு ஒரு நல்ல தலைவா், நல்ல தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் வருவதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஈரோட்டில் காய்கறி வியாபாரிகள் நீண்ட கால கோரிக்கையாக நேதாஜி காய்கறி மாா்க்கெட்டில் மீண்டும் வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்கின்றனா்.

அதேநேரம், மாநகராட்சி ஆணையா், சோலாா் அருகே மாா்க்கெட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வியாபாரிகளிடம் விவரித்துள்ளாா். இருந்தாலும், வியாபாரிகள் நேதாஜி காய்கறி மாா்க்கெட் ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுள்ளனா். வியாபாரிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்றாா்.

தொடா்ந்து ஈரோடு மாநகராட்சி பிச்சைக்காரன்பள்ளம் ஓடை தூா்வாரும் பணிகளை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு காவிரி தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற பேரிடா் ஒத்திகையைப் பாா்வையிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments