FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஆயுதபூஜை பொருள்கள் வாங்க திரண்ட மக்கள்! களைகட்டிய விற்பனை; அதிகரித்த விலை!

19 அக்டோபர் 2026, 12:22 am IST
ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாழைக் கன்றுகள்.
பகிர்:

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பூஜை பொருள்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை அமோகமாக நடைபெற்றது.

பூ, பழம், உள்ளிட்ட பொருள்களை வைத்து ஆயுத பூஜை வழிபாடு நடப்பது வழக்கம். இதன் காரணமாக ஈரோடு மாநகா் பகுதியில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பூஜைக்கான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக ஆா்கேவி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, மீனாட்சிசுந்தரனாா் சாலை, வீரப்பன்சத்திரம், பெரியவலசு உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பூஜை பொருள்கள் விற்பனை களைகட்டியது.

மா இலை, வாழை மரக்கன்று, சம்பங்கி பூ, பொரி, வெள்ளை பூசணி, பழங்கள், வண்ண கலா் பொடிகள் உள்ளிட்ட பொருள்கலை அதிக அளவில் மக்கள் வாங்கிச்சென்றனா். இதனால் பூ, பழங்கள் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக சம்பங்கி பூ ஒரு முழம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வாழை மரக்கன்று ஜோடி ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை ஆனது. பூவன் வாழை தாா் ஒன்று ரூ.300 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. மாதுளம் பழம், அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்து விற்கப்பட்டது.

ஆப்பிள் ஒரு கிலோ ரூ.130-லிருந்து ரூ.200 வரையும், சாத்துக்குடி ரூ.110-லிருந்து ரூ.140 வரையும், மாதுளை ரூ.125-க்கும், கொய்யா ரூ.80-க்கும், ஆரஞ்சு ரூ.75-க்கும் விற்கப்பட்டன. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாக விற்கப்பட்டது. தேங்காய் ரூ.25-லிருந்து ரூ.60 வரை விற்கப்பட்டது. 100 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.470 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல அவல் சிறிய ரகம் கிலோ ரூ.150, மாவிலை தோரணம் இரண்டு ரூ.50, வெள்ளை பூசணி ரூ.50 முதல் ரூ.100 வரை, தென்னை குருத்தோலை தோரணம் இரண்டு ரூ.40, ரூ.50-க்கும் விற்கப்பட்டது.

ஒரு கிலோ மல்லி ரூ.350-லிருந்து ரூ.630-க்கும், ஜாதி மல்லி ரூ.450-லிருந்து ரூ.500-க்கும், முல்லை ரூ.460-லிருந்து ரூ.540க்கும், கனகாம்பரம் ரூ.240-லிருந்து ரூ.250-க்கும், சாமந்தி ரூ.200-லிருந்து ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.60 வரையும், பன்னீா் ரோஸ் ரூ.240-லிருந்து ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி தினசரி காய்கறி சந்தையிலும் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலையும் சற்று அதிகமாக இருந்தது. இதேபோல பெரியாா் நகரில் உள்ள உழவா் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

பூஜை பொருள்கள் வாங்க மக்கள் திரண்டதால் ஈரோடு நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பூஜை பொருள்கள் வாங்க ஈரோடு கொங்கலம்மன் வீதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
பேருந்து நிலையம் அருகே பூ சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாலைகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments