மகாவீர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க ஆளறி சரிபார்ப்பு முகாம் இன்று தொடக்கம்
மகாவீர் பிளான்டேஷன் தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ. 9.25 கோடி நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு
மகாவீர் பிளான்டேஷன் தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ. 9.25 கோடி நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான 3 நாள்கள் ஆளறி சரிபார்ப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இது தொடர்பாக குன்னூர் தொழிலாளர் இணை ஆணையர் எல்.ரமேஷ் தெரிவித்துள்ளதாவது:
மகாவீர் பிளான்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பிராஸ்பெக்ட் எஸ்டேட், லிடிஸ்டேல் எஸ்டேட் ஆகிய தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலையளிப்பவரால் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை குறைந்தபட்ச ஊதிய சட்டம், பணிக்கொடை பட்டுவாடா சட்டம், தொழிற்தகராறு சட்டம் உள்ளிட்டவற்றின்படிவழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணைகள் பெறப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் குழு அமைக்கப்பட்டது.
குழுவில் கூடுதல் தொழிலாளர் ஆணையர்ஆர்.செந்தில்குமாரி, தொழிலாளர் இணை ஆணையர்கள் தமிழரசி, எல்.ரமேஷ், தொழிலாளர் துணைஆணையர் லீலாவதி, தொழிலாளர் உதவி ஆணையர்கள் முருகேசன், கோபாலகிருஷ்ணன், ஜி.கிரிராஜ், எஸ்.சுதா, எல்.திருநந்தன், கே.பி.இந்திரா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் வருவாய்த் துறையினருடன் இணைந்து நடுவட்டம் பேரூராட்சி அலுவலகத்திலுள்ள சமுதாயக் கூடத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மேற்கண்ட தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த ஆளறி சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
எனவே, இந்தத் தோட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்துத் தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருங்கால வைப்புநிதிக் கணக்கு எண், வங்கிக் கணக்குப் புத்தகம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவிலான 5 புகைப்படங்கள், உரிய அசல் ஆவணங்களின் நகல்களுடன் ஆளறி சரிபார்ப்பு முகாமில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.