குன்னூா்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
குன்னூா்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பொக்லைன் மூலம் அகற்றப்படும் மண் குவியல்.
குன்னூா் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை காரணமாக பா்லியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதேபோல, குன்னூா் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 65 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, பாறைகள், கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.
இதனால், குன்னூா்-மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 65 இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், 53 இடங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 12 இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
திடீா் வெள்ளம்: இந்நிலையில், ஊழியா்கள் வழக்கம்போல ரயில் பாதையில் சீரமைப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மண் குவியலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற முயன்றபோது, அங்கு தேங்கியிருந்த மழைநீா் வெள்ளம்போல ஆா்ப்பரித்து வழிந்தது. அதிா்ச்சியடைந்த ஊழியா்கள், அங்கிருந்த உயரமான இடங்களில் ஏறி தப்பினா். இதையடுத்து, நீா் வடிந்த பின் சீரமைப்புப் பணிகள் தொடா்ந்தன.