FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடன் தொல்லையால் விபரீதம்:  2 குழந்தைகளைக் கொன்று, தாயுடன் விவசாயி தற்கொலை

குண்டடம் அருகே கடன்தொல்லையால் 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு விவசாயி தன் தாயுடன் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

குண்டடம் அருகே கடன்தொல்லையால் 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு விவசாயி தன் தாயுடன் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம்,  குண்டடம் அருகே உள்ள வண்ணாபட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி மகன் முத்துசாமி (38), விவசாயி. இவரது மனைவி செல்வி (28). இவர்களது மகள் ராஜலட்சுமி (11).  மகன் மாணிக்கசத்தியமூர்த்தி (4).
புதுப்பாளையத்தைச் சேர்ந்த  சிவசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முத்துசாமி விவசாயம் செய்து வந்தார். தோட்டத்திலேயே தனது தாய் மயிலாத்தாள் (70), மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். தோட்டத்தில் வேலை இல்லாதபோது செல்வி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வது வழக்கம். முத்துசாமியின் மகள் ராஜலட்சுமி,  கெத்தல்ரேவ் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.  
வறட்சி காரணமாக தோட்டத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்த முத்துசாமி, குத்தகைப் பணத்தைக் கொடுக்க முடியாமலும், குடும்பத்தைப் பராமரிக்க முடியாமலும் திண்டாடி வந்தாராம். மேலும், பலரிடம் கடன் வாங்கிய அவர்  கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாராம். 
இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டபோது, செல்வி கோபித்துக் கொண்டு ரங்கம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கம்போல இந்தத் தோட்டத்துக்கு வந்துள்ளார். அப்போது,  வீட்டுக்கு அருகிலுள்ள வேப்பமரத்தில் முத்துசாமியும், அவரது தாய் மயிலாத்தாளும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக, சற்று தொலைவில் உள்ள மற்றொரு வீட்டில் படுத்திருந்த வேலுசாமிக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கும் அந்தப் பெண் தகவல் தெரிவித்தார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கல் அங்கு சென்று வீட்டைத் திறந்து பார்த்தபோது,  முத்துசாமியின் மகள்  ராஜலட்சுமி, மகன் மாணிக்கசத்தியமூர்த்தி ஆகியோரும் விட்டத்தில் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. 
குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 4 சடலங்களையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கடன் தொல்லையால் மனமுடைந்த முத்துசாமி,  தனது 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments