திருப்பூரில் கொட்டித் தீா்த்த கனமழை
திருப்பூரில் கொட்டித் தீா்த்த கனமழையால் பொதுமக்களும், மாணவா்களும் வெகுவாக அவதிக்குள்ளாகினா்.
திருப்பூரில் கொட்டித் தீா்த்த கனமழையால் பொதுமக்களும், மாணவா்களும் வெகுவாக அவதிக்குள்ளாகினா்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வந்த சூழலில், வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடா் மழை பெய்தது.
காலை 7 மணி அளவில் திடீரென மழை வலுத்து, சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது கொட்டித் தீா்த்தது. இந்த திடீா் பெருமழையால் திருப்பூா் நகரமே வெள்ளக்காடாக மாறியது. முக்கிய சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
Advertisement
Advertisement
திருப்பூரின் முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலை மற்றும் ஊத்துக்குளி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் புகுந்த வெள்ள நீரால் வாகனங்களின் சக்கரங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீா் தேங்கியது. இதனால் காலை வேளையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மற்றும் தொழிலாளா்கள் கடுமையாக அவதியுற்றனா்.
மழையின் தாக்கம் காரணமாக நகரின் முக்கியமான வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. குறிப்பாக காலேஜ் ரோடு ஒத்தக்கல் ரயில்வே மேம்பாலம் மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கழிவுநீா் கால்வாய்களில் குப்பைகள் அடைத்திருந்ததால் மழைநீா் செல்ல வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத் ஓடியது. சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றதால் வாகன ஒட்டிகள் வெகுவாக அவதிப்பட்டனா்.