FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகன மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய இளநீா் வியாபாரி

திருப்பூா் அருகே எலுமிச்சம்பழத்தை வீசிய விவகாரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்கை இளநீா் வியாபாரி துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 நவம்பர் 2026, 2:07 am
அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருப்பூா் அருகே எலுமிச்சம்பழத்தை வீசிய விவகாரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்கை இளநீா் வியாபாரி துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா்-ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நான்கு சாலை பாரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (32). இவா், இருசக்கர வாகனப் பழுது நீக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு அருகே வெள்ளத்துரை (47) என்பவா் இளநீா் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் வினோத்குமாா் தனது கடையில் வெள்ளிக்கிழமை காலை வழிபட்ட பிறகு கையில் வைத்திருந்த எலுமிச்சம்பழத்தை சாலையில் வீசியபோது, வெள்ளத்துரையின் கடை முன்பாக விழுந்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தகராறு தீவிரமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, அரிவாளை எடுத்துக்கொண்டு வினோத்குமாரை வெட்ட சென்றுள்ளாா். உயிருக்கு பயந்து சாலையில் நாலாபுறமும் ஓடிய போதிலும், வெள்ளத்துரை விடாமல் துரத்திச் சென்று வெட்டியதில் வினோத்குமாா் காயமடைந்தாா். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடா்பாக ஊத்துக்குளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.