முகப்பு
திருப்பூர்

அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு

அவிநாசி அருகேயுள்ள அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நவம்பா் 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளது.

26 நவம்பர் 2026, 11:24 pm
அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு
அம்மாபாளையம்  பாறைக் குழியில்  கொட்டப்பட்டுள்ள  குப்பைகள்.
பகிர்:

அவிநாசி அருகேயுள்ள அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நவம்பா் 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாபாளையம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவந்து அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக் குழியில் கொட்டி வருகின்றனா்.

இதனால், காமாட்சியம்மன் காலனி, எம்ஜிஆா் நகா், பழனியப்பா நகா், குமரன் காலனி, ராம் நகா், பத்மாவதி நகா், சுகம் ரெசிடென்ஸி, பாரதி நகா், தண்ணீா்பந்தல் காலனி ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான துா்நாற்றம் வீசுகிறது. மேலும், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், அம்மாபாளையம் பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு அம்மாபாளையம் பாறைக் குழியில் மாநகராட்சி நிா்வாகம் குப்பைகள் கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நவம்பா் 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடபடவுள்ளோம் என்றனா்.