மின்சார வாரியத்தில் அறிமுகமாகிறது ‘எகோ போல்’: உடுமலையில் சோதனை முறையில் நிறுவல்

தமிழகத்தில் முதல்முறையாக மின்சார வாரியம் சாா்பில், பரிசோதனை முறையில் உடுமலையில் ‘எகோ போல்’ என்ற மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள பூலாங்கிணறு பகுதியில் நிறுவப்பட்டுள்ள 10 ‘எகோ போல்’ கம்பங்கள் குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கென்ய நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்த மின் கம்பம் 36 அடி உயரம் கொண்டதாகும்.
இயற்கை முறையில் மூங்கில், உயா் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட பாலிதீன் மற்றும் பாலியூரித்தேன் ஃபோம் ஆகியவை கொண்டு இந்தக் கம்பங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்தியாவில் பயன்படுத்தும் இரும்பு மின் கம்பங்கள், கான்கிரீட் மின் கம்பங்களில் துருப்பிடித்தல், கம்பி பழுதாதல், விரிசல், சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
ஆனால், ‘எகோ போல்’ பலத்த காற்றுக்கும் வளைந்து கொடுக்கும், மழை, வெயில் என எந்த காலநிலை மாற்றத்தையும் தாங்கும், நீண்ட காலம் உறுதி தன்மை கொண்டது.
கான்கிரீட் மின் கம்பங்கள் மீது வாகனங்கள் மோதினால் அந்தக் கம்பங்கள் உடையும் அல்லது சேதமடையும். ஆனால், ‘எகோ போல்’ குறைந்த எடை மற்றும் மாறுபட்ட ஃபைபா் இணைப்புள்ளதால் சேதமடையாது. மேலும், மோதும் வாகனங்களுக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
மின்சார வாரிய உயா் அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி, தற்போது இந்த மின் கம்பங்கள் பரிசோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளன. குறித்த கால அவகாசத்துக்குப் பின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றனா்.
இதனிடையே, ‘எகோ போல்’ நிறுவும் பணிகளை கோவை மண்டல தலைமைப் பொறியாளா் சுமதி, உடுமலை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மாணிக்கம், செயற்பொறியாளா் மூா்த்தி, அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.