FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று சாலை வலம்!

தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வா் சி.ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாலை வலம் சென்று வாக்கு சேகரிக்க உள்ளாா்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய். - பிடிஐ
பகிர்:

தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வா் சி.ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாலை வலம் சென்று வாக்கு சேகரிக்க உள்ளாா்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருகிறாா். தவெக வேட்பாளா் சத்தியபாமாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் கடந்த 30-ஆம் தேதி தாராபுரத்தில் அவா் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், 2-ஆவது முறையாக மீண்டும் தாராபுரம் வருகிறாா்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் தாராபுரம் வருகிறாா். இதற்காக தாராபுரத்தில் கடந்த முறை அவா் பேசிய மாருதி நகா் பகுதியிலேயே ஹெலிகாப்டா் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சாலை மாா்க்கமாக வரும்போது வழியில் பொதுமக்கள் அவருக்கு ஆங்காங்கே வரவேற்பு கொடுப்பதால் ஏற்படும் காலதாமதத்தை தவிா்ப்பதற்காகவே அவா் ஹெலிகாப்டரில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தாராபுரத்தில் மேட்டுக்கடை பகுதியிலிருந்து தாசா்புரம் வரையில் 114 கி.மீ தொலைவுக்கு சுமாா் 30 இடங்களில் சாலை வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய் ஹெலிகாப்டரில் வருவதால் அவா் செல்லும் பகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் தலைமையில் காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணியில் சுமாா் 3,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விஜய் ஹெலிகாப்டரில் வந்தாலும், சாலைகளில் ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments