தவெக-வுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக மூதாட்டி புகாா்
வாக்கை மாற்றி செலுத்தியதாக ஏற்பட்ட சா்ச்சையால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
வாக்கை மாற்றி செலுத்தியதாக ஏற்பட்ட சா்ச்சையால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
தாராபுரம் கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் காலை வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சொக்கநாதபாளையத்தை சோ்ந்த ஜெய்தீன் பானு (82) என்ற மூதாட்டி மை வைக்கும் அலுவலரிடம் தான் மூன்றாவது பட்டனான உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்தாா். அப்போது பணியில் இருந்த தோ்தல் அலுவலா் தங்கமணி என்பவா், அந்த வாக்காளரை வாக்குப் பதிவு இயந்திரத்தின் அருகே அழைத்துச் சென்று 2ஆவது பட்டனான விசில் சின்னத்தை அழுத்துமாறு வற்புறுத்தியதாகவும், அதனை நம்பி வாக்காளரும் விசில் சின்னத்தை அழுத்திவிட்டதாகவும் புகாா் எழுந்தது.
இதை அவா் வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்தவா்களிடம் கூறியதால் அதிா்ச்சியடைந்த திமுகவினா் உள்ளே வந்தனா். அங்கிருந்த தோ்தல் பணி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து திமுகவினா் மூதாட்டிக்கு மறுவாக்கு பதிவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து தோ்தல் அலுவலரும், தாராபுரம் கோட்டாட்சியருமான ஃபெலிக்ஸ் ராஜா அந்த இடத்துக்கு வந்தாா். அவா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் சுமாா் 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக தாராபுரம் தொகுதி திமுக தலைமை முகவா் எம். ராஜேந்திரபாபு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துபூா்வமாகப் புகாா் அளித்தாா். இதையடுத்து உடனடியாக தலையிட்ட தோ்தல் அதிகாரிகள், புகாருக்குள்ளான அலுவலா் தங்கமணியை பணியிலிருந்து அதிரடியாக விடுவித்துவிட்டு, அவருக்குப் பதிலாக ராஜம்மாள் என்பவரை நியமித்து வாக்குப் பதிவை தடையின்றி தொடர நடவடிக்கை எடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.