தாராபுரம்: டெங்கு காய்ச்சலுக்கு 6 வயதுச் சிறுமி உயிரிழப்பு
தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயதுச் சிறுமி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயதுச் சிறுமி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வதம்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி விஸ்வநாதன் (28). இவரது மனைவி பாா்வதி (23). இந்தத் தம்பதியின் மகள்கள் ஜெயஸ்ரீ (6), சிவதா்ஷினி (4). இதில் ஜெயஸ்ரீ, வதம்பச்சேரியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சிறுமி ஜெயஸ்ரீ கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், காய்ச்சல் கட்டுக்குள் வராததால் தாராபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
Advertisement
Advertisement
அங்கும் சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிறுமியின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுமி ஜெயஸ்ரீ வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் மேலும் 6 போ் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுகாதாரத் துறை மூலம் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் நோயாளிகளைக் கண்காணித்து, தேவையான பரிசோதனைகள் மற்றும் உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.