வெள்ளக்கோவிலில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி தீவிரம்
வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பருவமழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு, இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பருவமழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு, இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து வாா்டுகளிலும் நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி ஆணையா் ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை களப் பணியாளா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது தூய்மைப் பணியாளா்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குடிநீா்த் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுவது, சாக்கடைக் கழிவுகளை அகற்றுவது, மக்கள் கூடும் பொது இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் முறையாக நடைபெறுவதை அவா் ஆய்வு செய்தாா். டெங்குவை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. எனவே பொதுமக்கள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் பேரல்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடா் கொண்டு தேய்த்துக் கழுவி, உலர வைத்துப் பயன்படுத்த வேண்டும். தொட்டிகளை கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மொட்டை மாடிகளிலும், வீட்டின் சுற்றுப்புறத்திலும் மழைநீா் தேங்க வாய்ப்புள்ள பழைய டயா்கள், உடைந்த குடங்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். குளிா்சாதனப் பெட்டியின் பின்பக்கம், பூந்தொட்டிகளில் தேங்கும் தண்ணீரை தினமும் அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிா்த்து, உடனடியாக மருத்துவா்களை நாட வேண்டும். வீடுகள், வணிக வளாகங்கள், கட்டுமானப் பணியிடங்களில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீா் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டால், பொது சுகாதார சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஆய்வின்போது துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ் உடனிருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.