FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உடல்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்கம்

தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் உடல்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் உடல்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சார்பில் நடைபெறும் புத்தாக்கப் பயிற்சி முகாமை மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) கே.பாலமுருகன் தொடக்கிவைத்தார்.

இதில் நீச்சல், ஸ்குவாஷ், கடற்கரை கையுந்துப் பந்து, கேரம், சிலம்பம், வளையப் பந்து, ஜிம்னாஸ்டிக், வாள் சண்டை, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, சாலை சைக்கிள், சதுரங்கம் ஆகிய விளையாட்டுகள் குறித்து நிபுணர்கள் மூலம் வரும் புதன்கிழமை (செப்.16) பயிற்சி அளிக்கப்படுகிறது. உடல்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் 50 பேர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளி மாணவர்கள் பேரணி

தருமபுரி மாவட்டம், லளிகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற பேரணியை பள்ளித் துணைத் தலைமை ஆசிரியர் எம்.நாகேந்திரன் தொடக்கி வைத்தார்.

இதில், கிராமப் புறங்களில் வீடுதோறும் கழிப்பறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். முழு சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

பள்ளி நுழைவு வாயில் முன் தொடங்கிய இப்பேரணி, நல்லம்பள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில், தேசிய மாணவர்படை அலுவலர் எம்.சக்கரவர்த்தி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி, தமிழர் மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் நிறுவனர் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

இதில், தருமபுரி தடங்கத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைந்து கட்ட வேண்டும்.

அதற்கு தேவையான நிதியை ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தமிழர் மக்கள் கட்சி நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் ஒன்றியச் செயலர் வி.திருமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் இரா.சேகர் கலந்து கொண்டு பேசினார்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை உபரிநீரை பாம்பாறு அணைக்கு விட வேண்டும், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இளைஞர் பெருமன்ற வட்ட துணைத் தலைவர் ஜெயராமன், துணைச் செயலர் வரதராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் குப்பன் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments