மக்கள் குறைதீர் கூட்டம்: தருமபுரியில் 442 மனுக்கள் அளிப்பு
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 442 மனுக்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்தனர்.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 442 மனுக்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நல்லம்பள்ளி அருகே புறவடையில் வசிக்கும் திருநங்கைகள் அளித்த மனு: புறவடைப் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களது குடியிருப்புப் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, திருநங்கைகளுக்கான அடையாள அட்டையைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
பரிசல் இயக்க வலியுறுத்தல்: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள நாகமரையிலிருந்து காவிரி ஆற்றில் மேட்டூர் அருகேயுள்ள பண்ணவாடி, ஒட்டையனூர் ஆகிய இடங்களுக்கு பரிசல் இயக்கப்பட்டு வந்தது. இப் பரிசல் மூலம், பென்னாகரம், ஏரியூர், நெருப்பூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சேலம், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அண்மையில் ஒகேனக்கல்லில் நிகழ்ந்த பரிசல் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, நாகமரை-பண்ணவாடி இடையே பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சாலை வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு உடைகள் அளித்து, விதிகளை பின்பற்றி மீண்டும் பரிசல் போக்குவரத்துத் தொடங்க வேண்டும் எனவும், விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ.க. மாவட்டப் பொதுச் செயலர் எம்.ஆறுமுகம் மனு அளித்தார்.
தர்னா: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேத்துரெட்டிப்பட்டைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டரான அர்ஜுனன் கடந்த ஜூலை மாதம் ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து, கடத்தூர் காவல் நிலையத்தில், அவர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தோம். இதில், ஒருவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யவில்லை.
எனவே, அர்ஜுனன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் தர்னாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் நகரக் காவல் ஆய்வாளர் காந்தி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல், காதொலிக் கருவிகளை ஆட்சியர் கே.விவேகானந்தன் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் பிச்சைராமன், துணை ஆட்சியர்கள் மல்லிகா, வள்ளி, ஆதிதிராவிடர் நல அலுவலர் இலாஹிஜான், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.