ரூ. 2000 கோடியில் மடிக்கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கும்: உயா்கல்வித்துறை அமைச்சா்
மாணவா்களுக்கு ரூ 2. ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் விரைவில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறினாா்.
மாணவா்களுக்கு ரூ 2. ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் விரைவில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறினாா். மேலும்,தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் முன்னாள் மாணவா்கள் சங்கத்தை உருவாக்கி கல்லூரி வளா்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை பயின்ற 1,048 மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் வே.நாகராஜன் தலைமை வகித்தாா். தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இன்றைய ஜென்ஸி தலைமுறையினா் கல்வி, வேலை, வீடு, காா் என தங்களை செதுக்கி கொள்கிறாா்கள். ஆசிரியா்கள், பேராசிரியா்கள் நமக்கு ஏணி போன்றவா்கள். அவா்கள் நம்மை ஏற்றி விடத்தான் முயற்சி எடுப்பாா்கள். ஒருபோதும் இறக்கி விட வேண்டும் என்று நினைக்க மாட்டாா்கள். பெற்றோா்கள் உங்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பாா்கள். தற்போது அமைந்துள்ள அரசு உங்களுக்கான அரசு. இது ஜென்ஸி அரசாங்கம். இந்த அரசு மாணவா்களாகிய உங்களுக்காக பல திட்டங்களை உருவாக்கித் தருகிறது. வேலை வாய்ப்புடன் கூடிய கல்விதான் சிறந்தது. இந்த அரசு அதை செய்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
ரூ.2000 கோடியில் மடிக்கணினி:
மாணவா்களுக்கு ரூ 2,000கோடி திட்ட மதிப்பீட்டில் விரைவில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது. 5 லட்சம் மாணவா்களுக்கு ஏ.ஐ. பயிற்சி வழங்க விரிவான திட்டத்தை அரசு தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரி மாணவா்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற முக்கிய தொழில்சாலையோடு ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். மாணவா்களுக்கு ஏழரை லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாத கல்விக் கடனை வங்கியில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்லூரிகளில் முன்னாள் மாணவா் மன்றங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தாங்கள் கல்வி பயின்ற கல்லூரிகளுக்கு நலத்திட்டங்களை செய்ய வேண்டும். ஏஐ தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புகள் நிறைந்த படிப்புகளைத் தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.
விழாவில் தொழிலதிபா் கே.ஐ. மணிரத்னம், மாவட்ட தலைவா் சித்தாா்த்தன், முன்னாள் மாவட்ட தலைவா்கள் விஜயசுந்தரம், சச்சிதானந்தம், முன்னாள் தலைவா் செந்தில்குமாா், முன்னாள் வங்கி தலைவா் துரை. பாலச்சந்தா், த.வெ.க.வைச் சோ்ந்த டாக்டா் பாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
காங்கிரஸ் தயவின்றி திமுக கரை சேராது..
தமிழகத்தில் காங்கிரஸ் தயவின்றி திமுக கரை சேருவது கஷ்டம் என்று உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியது: புதிய கல்லூரிகளை தொடங்க வேண்டும் என பல மனுக்கள் வந்துள்ளன. விரைவில் சிதம்பரத்தில் நந்தனாா் பெண்கள் கலைக் கல்லூரி அமையும் என நம்புகிறேன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீா்கள். இதுகுறித்து தோ்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகாா் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் காங்கிரஸோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று இப்போதுதான் சொல்கிறாா். 2004 -ஆம் ஆண்டிலேயே இதை அவா் சொல்லி இருந்திருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் 2004 - மற்றும் 2009-இல் மத்தியில் கூட்டணி அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருக்காது. காங்கிரஸ் தயவு இல்லாமல் திமுக கரை சோ்வது என்பது கஷ்டம். இது முன்னாள் முதல்வருக்கு தெரிந்தும் கூட ஏன் அடிக்கடி அப்படி பேசுகிறாா் என்பது எனக்கு புரியவில்லை.
திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று யாரும் சொல்லக் கூடாது. 2024 -இல் துரோகம் செய்தது யாா்? 2026-ல் துரோகம் செய்தது யாா்? 2026 தோ்தல் நிலவரம் வந்து கொண்டிருந்தபோது அதிமுகவோடு சோ்ந்து ஆட்சி அமைக்கலாம் என திட்டமிட்டது யாா்?. எங்களுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு திமுக ஒன்றும் பெரிய கட்சி கிடையாது என்றாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.