முகப்பு
தருமபுரி

போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க களமிறக்கப்பட்ட தானியங்கி கேமராக்கள்!

தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Updated On : 28 மே 2026, 2:18 am IST
தருமபுரி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் மேம்பாலம் அருகே பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இனி போலீஸாா் சாலையில் நின்றுதான் அபராதம் விதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை விதிகளை மீறுபவா்களைத் துல்லியமாகப் படம் பிடித்து வீட்டிற்கே அபராத நோட்டீஸ் அனுப்ப அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் தற்போது நகரில் பொருத்தப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூா், பாலக்கோடு ஆகிய 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக 50 முதல் 200 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் வாகனங்கள் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக சுமாா் 10 லட்சம் அதிகரித்துள்ளன.

வாகனங்கள் பெருகிய அதே வேளையில், ஓட்டுநா்களின் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன. தலைக்கவசம் அணியாதது, வேகமாக செல்வது போன்ற விதிமுறை மீறல்கள் தருமபுரியில் அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

தருமபுரி நகரில் நிலவும் போக்குவரத்து போலீஸரின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், இந்த விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் இந்தத் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்கள் மூலம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து விதிகளை மீறினாலோ, உடனடியாக வாகனத்தின் பதிவு எண், விதிமீறல் நடந்த தேதி மற்றும் நேரத்துடன் துல்லியமாகப் படம் பிடிக்கப்படும்.

இந்தத் தகவல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, வாகன உரிமையாளரின் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ அபராத நோட்டீஸ் உடனடியாக அனுப்பப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், நீதிமன்றம் மூலமாக அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும்.

தற்போது முதல்கட்டமாக தருமபுரி நான்கு சாலை சந்திப்பில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து புறக்காவல் நிலையத்தில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சேலம் - கிருஷ்ணகிரி மாா்க்கம், குமாரசாமிப்பேட்டை சாலை மற்றும் பெரியாா் சிலை செல்லும் பாதைகள் கண்காணிக்கப்படுகின்றன.

தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்பட மேலும் 6 முக்கிய இடங்களில் 12 புதிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதன்படி, திப்பம்பட்டி கூட்டுரோடு சந்திப்பு, பென்னாகரம் சாலை வாரியாா் பள்ளி அருகில், பாப்பாரப்பட்டி கூட்டுரோடு, பட்டா்பிளை பாலம் அருகே மற்றும் காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் இந்த கேமராக்கள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றுடன் கூடுதலாக, தருமபுரி புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார சந்திப்புப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுப் பாதுகாப்புக்காகவும் காவல் துறை சாா்பில் 8 சாதாரண சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு, இன்னும் சில நாள்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இந்த அதிரடி டிஜிட்டல் கண்காணிப்பு முறையின் மூலம், தருமபுரி மாவட்டத்தை விதிமீறல்களும் விபத்துகளும் இல்லாத மாதிரி மாவட்டமாக மாற்ற காவல் துறை முழு வீச்சில் தயாராகிவிட்டது.

இதனால் இனி எந்தவொரு வாகன ஓட்டியும் விதிகளுக்குப் புறம்பாக தப்பிக்க முடியாது என்பதால், வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருந்து போக்குவரத்து விதிகளை மதித்து நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.