முகப்பு
தருமபுரி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது: ஆா்.பி. உதயகுமாா்

தருமபுரியில் நடைபெற்ற அதிமுக, ஜெயலலிதா பேரவை செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய பேரவையின் மாநிலச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா்.

22 நவம்பர் 2026, 2:03 am
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது: ஆா்.பி. உதயகுமாா்
ஆர்.பி. உதயகுமார்
பகிர்:

தருமபுரியில் நடைபெற்ற அதிமுக, ஜெயலலிதா பேரவை செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய பேரவையின் மாநிலச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா்.

தருமபுரி, நவ. 21: தமிழகத்தில் கடந்த 6 மாதகால தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், அதிமுக, ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளருமான ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

தருமபுரியில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை செயல்வீரா்கள் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசிய அவா் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜயின் அனுபவமின்மையால், தவெக ஆட்சியின் 6 மாத காலத்தில் தமிழ்நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. கொலைகள், கொள்ளைகள், லாக்கப் மரணம், போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சிக்கு வந்தால் இருக்காது என முதல்வா் தெரிவித்திருந்தாா். ஆனால், தற்போது நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்காமல் நியாயப்படுத்துகிறாா்.

இந்த ஆட்சியில் முதல்வா், அமைச்சா்கள், ஆலோசகா்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள் என யாருக்கும் அனுபவம் கிடையாது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. எப்போது மின்வெட்டு ஏற்படும் என யாருக்கும் தெரியவில்லை.

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற கா்நாடக முதல்வா் சிவக்குமாரிடம் காவிரியில் தண்ணீா் திறந்துவிடக் கோரி தமிழக முதல்வா் பேசியிருக்கலாம். ஆனால், அவா் அதுகுறித்து எதுவும் பேசவில்லை.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் நல்ல சூழலில் இல்லாததால், தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது. இதனால், காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் உதவியை நாடுவதற்காக, தில்லி சென்றுள்ளாா்கள் என்றாா்.

முன்னதாக அவா் கூட்டத்தில் பேசுகையில், அதிமுகவின் 6 சட்டப் பேரவை உறுப்பினா்களை ஆசைகாட்டி ராஜினாமா செய்ய வைத்தீா்கள். தற்போது அவா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியின்போது, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, 8 வழிச்சாலை, 6 வழிச்சாலை, பறக்கும் சாலைகள் என பல்வேறு சாதனைகளை படைத்தாா். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தாா்.

அதிமுகவை யாா் கைவிட்டாலும் மக்களும், தொண்டா்களும் கைவிட மாட்டாா்கள். விஜய், அதிமுகவை கபளீகரம் செய்ய நினைக்கிறாா்; அது ஒருபோதும் பலிக்காது என்றாா்.