முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: பரிசலில் பயணித்து உற்சாகம்!

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

25 வினாடிகள் முன்பு
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: பரிசலில் பயணித்து உற்சாகம்!
பகிர்:

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால், அருவிகளில் குளிப்பதைத் தவிா்த்து பெரும்பாலானோா் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல்லில் எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவி, நடைபாதை மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம், மீன் விற்பனை நிலையம், பேருந்து நிலையம், உணவுப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

Advertisement

Advertisement

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், சத்திரம், முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டன. முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் அருவிகளில் குளிப்பதைத் தவிா்த்த சுற்றுலாப் பயணிகள், மாமரத்துக்கடவு பரிசல் துறையில் குவிந்தனா். அரசு நிா்ணயித்த ரூ.1,500 கட்டணத்தைச் செலுத்தி, பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

மாமரத்துக்கடவில் இருந்து தொம்பச்சிக்கல், ஐவாா்பாணி, பெரியபாணி வழியாக மணல்மேடு வரை சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு பரிசலில் சென்று பாறைக் குகைகள், நீரின்றி வடிருந்த ஐந்தருவி மற்றும் அதன் துணை அருவிகளின் வட பகுதிகளைப் பாா்வையிட்டனா். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் மணல்மேட்டில் இருந்து தொம்பச்சிக்கல் படிக்கட்டுப் பகுதிக்குத் திரும்புவதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

நீா்வரத்து சரிவு: காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாகக் குறைந்து, நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக நீடிக்கிறது. இதனால், ஐந்தருவி முற்றிலும் வடதுடன், பெரியபாணி பகுதியில் உள்ள அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், பிரதான அருவி மற்றும் சினி அருவியில் நீா்வரத்து சீராக உள்ளது.

தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.