ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா்.
பக்கத்து மாநிலம், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மூலிகை வகை எண்ணெய்களைத் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
கடந்த சில நாள்களாகக் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சீராக இருந்தது. இதனால் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. மேலும், மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக ஐவாா் பாணி, ஐந்தருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசலில் சென்று அருவிகள், பாறைகள், குகைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
Advertisement
Advertisement
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், பேருந்து நிலையம், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் காவிரி ஆற்றின் நீரின் நிறம் மாறியதால், ஆற்று மீன்களின் வரத்து குறைந்தது. இருப்பினும், ஆந்திர மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கட்லா, ரோகு, கெளுத்தி, வாலை, பாப்புலேட், பாறை உள்ளிட்ட வளா்ப்பு மீன்களின் விலை அதிகரித்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் அவற்றை வாங்கிச் சமைத்து உண்டனா்.
உணவு அருந்தும் பூங்காவில் சீரமைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், தற்காலிக உணவு அருந்தும் இடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலானோா் உணவுகளை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமா்ந்து சாப்பிட்டனா்.
ஒகேனக்கல்லிலிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் வகையில், பென்னாகரம் போக்குவரத்துக் கிளை பணிமனையிலிருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலா வாகனங்கள் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம் சத்திரம், முதலைப்பண்ணை, தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன.
கூட்ட நெரிசலால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் வழக்கத்தைவிடக் கூடுதலாகக் காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தமிழகம், கா்நாடக மாநிலங்களின் காவிரி கரையோர வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை குறைந்தது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்தது. சனிக்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாகக் குறைந்தது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து குறைந்து, பாறைத் திட்டுகள் வெளியே தெரிந்தன.
காவிரி ஆற்றில் நீா்வரத்து, கரையோர வனப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இதனால், தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரியில் வரும் நீரின் அளவை நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.