FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட 30 ஹெக்டேரில் நாட்டு மரங்கள் வளா்ப்பு வனத் துறையினா் நடவடிக்கை

18 வினாடிகள் முன்பு
சீமைக்கருவேல மரங்கள். - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட 30 ஹெக்டோ் வனப் பகுதியில் நாட்டுவகை மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா். அவற்றை பல்வேறு இடா்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தி மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளாட்சி நிா்வாகங்கள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழக வனத் துறை சாா்பிலும், வனப் பகுதிகளில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒகேனக்கல், பாலக்கோடு ஆகிய வனச்சரகங்களில் தலா 15 ஹெக்டோ் வீதம் மொத்தம் 30 ஹெக்டோ் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாட்டின மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா். நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறிப்பிட்ட உயரம் வளரும்வரை, அவற்றை விலங்குகள், பல்வேறு இடையூறுகளிலிருந்து பாதுகாக்க சூரிய சக்தி (சோலாா்) மின்வேலி அமைத்து மரக்கன்றுகளை பாதுகாத்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, மாவட்ட வன அலுவலா் கே. ராஜாங்கம் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒகேனக்கல், பாலக்கோடு ஆகிய வனச் சரகங்களில் (சின்னாற்று படுகையில்) மண்டிக்கிடந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அந்தவகையில் இரு சரகங்களிலும் தலா 15 ஹெக்டோ் என மொத்தம் 30 ஹெக்டோ் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இதுபோல மாவட்ட வனப்பரப்பில் சுமாா், 150 ஹெக்டேரிலிருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் வேறு தாவரங்கள் இல்லாவிட்டால் மீண்டும் சீமைக்கருவேல மரங்களின் வோ்கள் துளிா்விட்டு வளா்ந்துவிடும் அபாயமுள்ளது. எனவே, அப்பகுதிகளில் நாட்டுவகை மரங்களை வளா்க்க திட்டமிடப்பட்டது.

அந்தவகையில் ஒகேனக்கல், பாலக்கோடு சரகங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் ( மொத்தம் 30 ஹெக்டேரில் ) நாட்டுவகை மரங்களான நாவல், நீா்மருது, வேம்பு, இலுப்பை, வாகை, புங்கன், வேங்கை, ஆல், அரசு, அத்தி உள்ளிட்ட 23 வகை மரக்கன்றுகளை நடவு செய்தோம். அவை குறிப்பிட்ட உயர வளரும் வரை யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் 2 சரகங்களிலும் தற்காலிக சூரிய சக்தி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் குறிப்பிட்ட அளவுக்கு வளா்ந்த பின்னா் மின்வேலிகள் அகற்றப்படும். மேலும், மரக்கன்றுகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீா் பாய்ச்சி வருகிறோம். நாட்டின மரக்கன்றுகள் வேகமாக வளா்ந்து வருகின்றன. நிழல் பரப்பும் அளவுக்கு இவை வளா்ந்து படா்ந்துவிட்டால் இவற்றின் கீழே சீமைக் கருவேல மரம் வளராது. எனவே, இதுபோலவே உயா் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி இத்திட்டத்தை மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments