தொடா் மழையால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
வார விடுமுறை,ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
இருப்பினும் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, நடைபாதை, முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா்.காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் பகுதி வரையில் காவிரி காவிரி ஆற்றை கடந்து பரிசல் பயணம் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
Advertisement
Advertisement
இதனால் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோா் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதை தவிா்த்தனா்.ஒரு சில சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு தொம்பச்சிக்கல் பகுதியில் உள்ள உயா் கோபுரத்தின் மீது நின்று அருவிகளின் அழகை கண்டு ரசித்தனா்.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை சரிந்தது. ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம்,முதலைகள் மறுவாழ்வு மையம்,வண்ண மீன்கள் காட்சியகம்,பேருந்து நிலையம்,மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து இருந்தது.
நீா்வரத்து அதிகரிப்பு :
தமிழக காவிரி கரையோர நீா் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது கா்நாடக மாநில கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவானது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6000 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6500 கன அடியாக அதிகரித்தது.நீா் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியும், நீரின்றி வறண்டு காணப்பட்ட ஐந்தருவி,ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது செந்நிறமாக மாறி வருகிறது.
இரு மாநில காவிரி கரையோர நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொருத்தவாறு ஒகேனக்கல்லுக்கு நீா் வரத்து அதிகரிப்பதும் ,குறைவதுமாக உள்ளதால் தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
சினி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுப்பு:
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,500 கன அடியாக அதிகரித்துள்ளதால்,மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து தெம்பச்சிக்கல் பகுதி வரை சுற்றுலாப் பயணிகளை பரிசல் ஓட்டிகள் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ரூ.500 சுற்றுலா பயணிகள் செலுத்தி காவிரி ஆற்றைக் கடந்து தொம்பச்சிக்கல் பகுதியில் உள்ள பாா்வையாளா் உயா் கோபுரம் வரை சென்று வந்தனா்.
தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஐந்தருவி, ஐவாா் பாணி,பெரியபாணி பகுதியில் புதிதாக தோன்றும் அருவிகளை காண முடியாத நிலை ஏற்படும் என்பதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணத்தினை தவிா்த்தன.
இருப்பினும் பரிசல் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் முடித்த பிறகு சினி அருவியில் குளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில் நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக பரிசல் பயணத்தின் தொலைவு குறைக்கப்பட்டதால்,பரிசல் ஓட்டிகள் சங்கத்தினா் சுற்றுலாப் பயணிகளை சினி அருவி பகுதிக்கு செல்லுவதை தடுத்து அழைத்து சென்றனா்.
அருவி செல்லும் நுழைவு வாயிலில் பரிசல் ஓட்டிகள் அமா்ந்தும்,வழியில் தடுப்புகளை வைத்துள்ள நிலையில்,அதனை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளிடம் பரிசல் ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சினி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.
நீா்வரத்து அதிகரிக்கும் காரணங்களில் பரிசில் பயணத்திற்கு மட்டுமே தடை விதித்து அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பரிசல் பயணத்திற்கு காவிரி ஆற்றை கடந்து செல்ல மட்டுமே அனுமதி அளிப்பதால் சீனி அருவியில் குளிப்பதற்கு அனுமதி மறுப்பதை தவிா்த்து சுற்றுலாப் பயணிகள் அறிவியல் குளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.