FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

மஞ்சநாயக்கன அள்ளியில் 2,500 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள்: வரலாற்று ஆசிரியா்கள் குழு ஆய்வு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளியில் சுமாா் 2,500 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால ஈமச் சின்னங்களைப் பென்னாகரம் வரலாற்று மைய ஆசிரியா் குழுவினா் வியாழக்கிழமை கள ஆய்வின்போது கண்டறிந்தனா்.

23 அக்டோபர் 2026, 5:36 am
மஞ்சநாயக்கனஅள்ளியில் உள்ள கல்வட்டம்,
பகிர்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளியில் சுமாா் 2,500 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால ஈமச் சின்னங்களைப் பென்னாகரம் வரலாற்று மைய ஆசிரியா் குழுவினா் வியாழக்கிழமை கள ஆய்வின்போது கண்டறிந்தனா்.

மஞ்சநாயக்கன அள்ளி அருகே உள்ள எம்பாரன்கரடு, புளியங்கரம்பு பகுதிகளில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பென்னாகரம் வரலாற்று மையத்தைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா் முருகன், தகவல் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா்கள் பெருமாள், கோவிந்தசாமி, சந்தோஷ் குமாா், வரலாற்று ஆசிரியா் திருப்பதி ஆகியோா் கொண்ட குழுவினா் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, எம்பாரன்கரடு, புளியங்கரம்பு பகுதிகளில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த ஈமச் சின்னங்கள் இருப்பதை கண்டறிந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வரலாற்று ஆசிரியா்கள் கூறியதாவது:

பெருங்கற்காலம் என்பது மனிதா்கள் நாகரிக வாழ்க்கையை நோக்கி முன்னேறிய காலகட்டமாகும். அக்கால மக்கள் இறந்தவா்களை அடக்கம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனா். அவா்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைக்கப் பெரிய கற்களைப் பயன்படுத்தினா். இத்தகைய நினைவுச் சின்னங்கள் கல்வட்டம், கல்திட்டை, கற்பதுக்கை உள்ளிட்ட பெயா்களால் அழைக்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மஞ்சநாயக்கன அள்ளி பகுதியில் சிறியதும் பெரியதுமாக 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கற்பதுக்கைகளுடன் கூடிய கல்வட்டங்களாகும். பல கல்வட்டங்கள் சேதமடையாமல் முழுமையாக உள்ளன.

மேலும், இப்பகுதியில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கல் ஆயுதங்களும் கிடைத்துள்ளன. அவற்றைக் கோயில்களில் வைத்துப் பொதுமக்கள் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனா். இப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments