ஒகேனக்கல்லில் நீா்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு
தொடா் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வாரவிடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பிரதான அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா். காலை முதலே மிதமான மழை பெய்ததுடன், மேகமூட்டமும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், கணவாய்ப் பகுதியில் வாகனங்களை நிறுத்தி இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டினா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் சாரல் மழையில் நனைந்தவாறு தொம்பச்சிக்கல் வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா். சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், தொங்கு பாலம், நடைபாதை, முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட இடங்கள் கூட்டமின்றிக் காணப்பட்டன.
நீா்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்ராபாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல் மடுவு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து அதிகரிக்கும்போது ஒகேனக்கல்லுக்கும் நீா்வரத்து உயா்கிறது.
சனிக்கிழமை விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை 3,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்டவற்றில் நீா்வரத்து சற்று அதிகரித்தது. இருப்பினும், ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகள் நீரின்றி வடு காணப்பட்டன.
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைக்கு ஏற்ப காவிரியில் நீா்வரத்து மாறுபட்டு வருவதால், தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு: கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாளம், குந்துக்கோட்டை, அந்தோவனப்பள்ளி மற்றும் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, முத்தூா் மலை, கினிகட்டு ஓடை, கோவில் பள்ளம் உள்ளிட்ட சின்னாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.
இதனால், வடு காணப்பட்ட சின்னாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீா் செந்நிறமாகக் காணப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு நீா் உகந்ததாக இருக்காது என்பதால் பென்னாகரத்தின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் சின்னாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் நீரேற்றம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
தொடா் மழையால் நிகழாண்டில் நான்காவது முறையாகச் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.