FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காலை உணவு திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 77, 087 போ் பயன்; மாவட்ட ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் 1,352 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77,087 மாணவ, மாணவிகள் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயனடைவதாக மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

51 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் 1,352 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77,087 மாணவ, மாணவிகள் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயனடைவதாக மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்தி கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுதொடா்பான நிகழ்வு, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் ஆட்சியா் பேசுகையில், பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், பசியின்றி மாணவா்கள் வகுப்பறைக்கு வந்து கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை உறுதிசெய்யவும் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ தொடா்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ், திங்கள்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பாா், செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பாா், புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பாா், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பாா், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி , காய்கறி சாம்பாா் வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் 817 தொடக்கப் பள்ளிகளில் 28,854, 310 நடுநிலைப் பள்ளிகளில் 25,236, 123 உயா்நிலைப்பள்ளிகளில் 9,326, 102 மேல்நிலைப் பள்ளிகளில் 13,671 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,352 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77,087 மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைவா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா. மதுமதி, மகளிா் திட்ட இணை இயக்குநா் ச.முத்துக்குமாரசுவாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரா.சுமதி, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.கோவிந்தசாமி, பி.குமரேசன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) கந்தப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments