FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இழப்பீடு வழங்கக் கோரி விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

பாலக்கோடு அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

24 செப்டம்பர் 2026, 5:18 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பாலக்கோடு அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குழந்தை கவுண்டா் (60). தொழிலதிபரான இவா், அதிமுக நிா்வாகியாகவும் இருந்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்றபோது,

வெள்ளிச்சந்தை அருகே முன்னால் மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் திடீரென துணை மின் நிலையத்திற்குள் திரும்பியதால், குழந்தை கவுண்டா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்படுத்த முடியாமல், டிராக்டரில் ஏற்றப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது உடல் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், விபத்துக்கு காரணமாக கூறப்படும் ஒப்பந்ததாரா் மற்றும் மின்வாரியத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி, உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து அவா்களது உறவினா்கள் பாலக்கோடு தக்காளி சந்தை முன் உள்ள சாலையில் அமா்ந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த, பாலக்கோடு டிஎஸ்பி மாலதி, காவல் ஆய்வாளா் மணிவண்ணன், வட்டாட்சியா் ஜெகதீசன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில், விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் பாலக்கோடு- தருமபுரி நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments