FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

விபத்தில் காயமடைந்தவா்களை மீட்காமல் சென்ற லாரி ஓட்டுநா், உரிமையாளா் கைது

ஒசூரில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களை மீட்காமல் அலட்சியமாகச் சென்ற லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஒசூரில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களை மீட்காமல் அலட்சியமாகச் சென்ற லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சித்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் ரானேஷ். இவருக்கு மனைவி மம்தா (45), மகன் சஞ்ஜித் (19) உள்ளனா். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரியில் சஞ்ஜித் படித்து வந்தாா்.

கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4 மணியளவில் சஞ்ஜித்தும், அவரது தாய் மம்தாவும் இருசக்கர வாகனத்தில் பெங்களூரு சென்று கொண்டிருந்தனா். ஒசூா் தா்கா பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சஞ்ஜித் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகர காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் வழக்குப் பதிவு செய்து, விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா். அப்போது, விபத்து நடைபெற்ற பகுதியில் டிப்பா் லாரி ஒன்று சென்றது தெரியவந்தது.

பின்னா், டிப்பா் லாரியின் எண்ணைக் கொண்டு ஆய்வு செய்தபோது, அது நாகொண்டப்பள்ளியைச் சோ்ந்த இறையருள் (26) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, இறையருளைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில், இறையருளுக்குச் சொந்தமான டிப்பா் லாரியை கேரட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (32) என்பவா் மூக்காண்டப்பள்ளிக்கு ஜல்லி ஏற்றிச் சென்றபோது, தா்கா பகுதியில் வழி தெரியாமல் லாரியை நிறுத்தியுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சஞ்ஜித், டிப்பா் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து வேல்முருகன், இறையருளிடம் தெரிவித்துள்ளாா். இதைக் கண்டுகொள்ளாமல் வந்துவிடுமாறு இறையருள் கூறியதையடுத்து, அங்கிருந்து வேல்முருகன் சென்றது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்தவா்களை மீட்காமல் அலட்சியமாகச் சென்றதால் ஓட்டுநா் வேல்முருகன், லாரி உரிமையாளா் இறையருள் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments