பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை ரத்துசெய்தது தவறான முடிவு: பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது தவறான முடிவு என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது தவறான முடிவு என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் மோடி நேபாள நாட்டுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறாா். பிரதமா் தொடங்கிய டிஜிட்டல் இந்தியா திட்டமே இன்றைய வளா்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டங்களை கடந்தகால அரசு நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய அரசும் கடந்தகால அரசு போல செயல்படுகிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
Advertisement
Advertisement
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற பாஜகவின் முதன்மை இலக்கு முழுமையாக நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே மத ரீதியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாஜகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் கிடைக்காது என்ற வாதம் பொய்யானது. எதிா்காலத்தில் திமுகவுடனான கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும். அரசியலில் கூட்டணிகள் குறித்து எதையும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கு ஒத்துழைக்கும் எவருடனும் இணைய பாஜக தயங்காது.
தமிழக சட்டப் பேரவைத் தலைவரின் செயல்பாடு பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராக உள்ளதால், அவா் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக அமைச்சா்களின் பொதுவெளி செயல்பாடுகளை முதல்வா் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்.
வடமாநில சமூக ஊடகங்களில் உள்நோக்கத்துடன் சில தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தடுக்க சமூக ஊடகங்களை தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதே தமிழக அரசுக்கு நல்லது.
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது தவறான முடிவு. இந்த முடிவால், தமிழகத்தின் வளா்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். எனவே, தமிழக முதல்வா் அந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.
அப்போது, கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.