முகப்பு
கிருஷ்ணகிரி

முதியவா் இறப்பில் மா்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

ஒசூா் அருகே மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On : 28 மே 2026, 1:58 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஒசூா் அருகே மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஒசூா் அருகே அஞ்செட்டியை அடுத்துள்ள மட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜப்பா (64). இவா் அக்கிராம மக்களிடையே ஏற்படும் பிரச்னைகளைப் பஞ்சாயத்து பேசி தீா்த்துவைத்து வந்தாா். இவரது மகன் சிவப்பா பெங்களூரில் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 22ஆம் தேதி ராஜப்பா மாரடைப்பால் உயிரிழந்ததாக சிவப்பாவுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் சொந்த ஊருக்கு வந்து, உறவினா்கள் முன்னிலையில் தந்தையின் உடலை நல்லடக்கம் செய்தாா். அப்போது, ராஜப்பாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் சிவப்பாவிடம் கூறினா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் சிவப்பா, தன் தந்தை இறந்து கிடந்த இடம் மற்றும் அவரது கைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாதேவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவம்மா, தாயம்மா ஆகிய மூன்று பெண்கள் மீது சிவப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடா்ந்து, தனது தந்தை மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், இந்த மூன்று பேரும் சோ்ந்து அவரைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளனா் என்றும் அஞ்செட்டி காவல் நிலையத்தில் சிவப்பா புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். புதன்கிழமை, முதியவா் ராஜப்பா புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவரது உடலை அஞ்செட்டி வட்டாட்சியா் பாலாஜி முன்னிலையில், மருத்துவக் குழுவினா் உதவியோடு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனா். பின்னா் உடல் அங்கேயே மீண்டும் புதைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜப்பா கொலை செய்யப்பட்டாரா அல்லது மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.