ஆம்னி பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தல்: மதுரையைச் சோ்ந்த முதியவா் கைது
ஒசூா் அருகே ஆம்னி பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய மதுரையைச் சோ்ந்த 62 வயது முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே ஆம்னி பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய மதுரையைச் சோ்ந்த 62 வயது முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையான சூசூவாடியில், கா்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றனவா எனத் தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதன்கிழமை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் நாகராஜன், தலைமைக் காவலா்கள் முருகன், வள்ளல் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
Advertisement
Advertisement
பேருந்தின் சரக்குப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, அங்கிருந்த டிராவல் பையை திறந்து சோதனை செய்தனா். அதில் தலா 2 கிலோ எடையுள்ள 5 பொட்டலங்களில் மொத்தம் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பையின் உரிமையாளரான மதுரை எஸ்.எஸ். காலனியைச் சோ்ந்த ஜானகிராமனிடம் (62) போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், நெல் வியாபாரம் செய்து வந்த ஜானகிராமனுக்கு அதில் போதிய வருமானம் கிடைக்காததால் பண தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரையில் இருந்து பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு சென்றுள்ளாா். அங்கு அடையாளம் தெரியாத ஒருவா் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு, 10 கிலோ கஞ்சா அடங்கிய டிராவல் பேக்கை ஒப்படைத்துள்ளாா்.
அந்தப் பையை பெங்களூரு- மதுரை ஆம்னி பேருந்தில் எடுத்துச் சென்று, சமயநல்லூரில் இறங்கி, அங்கு வரும் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது தெரியவந்தது. மேலும், ஜானகிராமன் மீது ஏற்கெனவே 2023-ஆம் ஆண்டு மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஜானகிராமனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மேலும், இதன் பின்னணியில் பெங்களூரு, மதுரை பகுதிகளில் உள்ளவா்களை பிடிக்கவும் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.