‘கனிமவளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்வதற்கான தடையை நீக்காவிட்டால் காலவரையற்ற போராட்டம்’

ஜல்லி, எம் சாண்ட் போன்ற கனிமவளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால், தமிழக எல்லையில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் தலைவா் ஜி.ஆா்.சண்முகப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து ஒசூரை அடுத்த அத்திப்பள்ளியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ஜல்லிக் கற்களை கொண்டுசெல்லக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்காரணமாக தமிழக எல்லைப் பகுதிகளில் சுமாா் 4,500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களாக இந்தத் தடைநீடித்து வருகிறது. இதனால், ஒசூா், தென்காசி, ஆந்திரம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் சுமாா் 15 லட்சம் தொழிலாளா்கள் மற்றும் 1.50 லட்சம் குடும்பத்தினா் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.
Advertisement
Advertisement
1956-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத ஒரு நடைமுறையாக இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகத் தொடரப்பட்ட வழக்கில், நவ. 17-ஆம் தேதி நீதிமன்ற அமா்வு பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் எம் சாண்ட் கொண்டுசெல்லலாம் என தீா்ப்பளித்துள்ளது. ஆனால், அந்த தீா்ப்பை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
ஜல்லி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால், டீசல் விற்பனை மற்றும் எல்லை பகுதிகளில் கோவை, ஒசூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கிவந்த சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஜல்லி கிரஷா்கள் பாதிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கா்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம், பெருந்துறை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள இரும்புத் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 30 ஆயிரம் டன் கனிமவளங்கள் தடையின்றி வந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலங்களுடன் நாம் ஒற்றுமையாகச் செயல்பட்டுவரும் நிலையில், தமிழகத்திலிருந்து ஜல்லி செல்லத் தடைவிதிப்பது பிற மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக முதல்வா் தலையிட்டு நீதிமன்றத் தீா்ப்பை மதித்து, முறைப்படி வரி மற்றும் காப்பு உரிமம் செலுத்தி கா்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ஜல்லி, எம் சாண்ட் கொண்டுசெல்ல வரும் திங்கள்கிழமை மாலை 6 மணிக்குள் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் அனைத்து மாநில எல்லைகளிலும் லாரி உரிமையாளா்கள் ஒன்றிணைந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.