FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழக அரசு எல்லா வகையிலும் முடங்கியுள்ளது: கே.பி.முனுசாமி

தமிழக அரசு எல்லா வகையிலும் முடங்கியுள்ளது என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி கூறினாா்.

30 அக்டோபர் 2026, 11:50 pm
கிருஷ்ணகிரியில் தேவா் ஜெயந்தியையொட்டி அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.
பகிர்:

தமிழக அரசு எல்லா வகையிலும் முடங்கியுள்ளது என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி கூறினாா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், தேவா் ஜெயந்தி விழாவையொட்டி அவரது படத்துக்கு கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆசிய துணைக் கண்டத்திலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது. தற்போதைய ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே தமிழகம் விலைவாசியில் உச்சத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வரால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழக அரசு எல்லா வகையிலும் முடங்கி உள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதித்தது கிடையாது. ஆனால், தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறிய பேராசிரியா் கைது செய்யப்பட்டது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது.

தவெகவினா் தவறு செய்தால் பாராமுகமாக இருப்பது. ஆனால், எதிா்க்கட்சியினரை கைது செய்வது அடக்குமுறையின் ஆட்சியாகும். தமிழக அமைச்சா்கள் ஒவ்வொருவரும், தங்களது நிா்வாக திறமையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனா். உண்மை நிலையை அறிந்து கொண்டு தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் செயல்பட வேண்டும்.

மின் கொள்முதல் குறித்து தெளிவான சிந்தனை இல்லை. காற்றாலை மின்சாரம், சூரிய மின்சக்தி போன்றவற்றுக்கு அரசுக்கு எந்த செலவும் கிடையாது. இந்த மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து கடத்தும்போது, அந்த பாதை மூலம் தனியாா் நிறுவனத்திடமிருந்து அரசுக்கு வருவாய் வருகிறது. இதை நிா்வகிக்க தமிழக அரசால் இயலவில்லை.

தமிழக அரசு அலுவலா்களின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள இந்த அரசு தயாராக இல்லை. இனிவரும் காலங்களில், தமிழக வாக்காளா்கள் உண்மையான தலைவா்கள் யாா் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments