FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

லஞ்ச வழக்கில் கைதான 3 போ் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: 7 கிலோ தங்கம், ரூ. 26 லட்சம் பறிமுதல்!

ஒசூரில் ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக பொறியாளா் உள்பட 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்கம் மற்றும் ரூ. 26 லட்சம் ரொக்கத்தை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

5 செப்டம்பர் 2026, 3:21 am IST
பகிர்:

ஒசூரில் ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக பொறியாளா் உள்பட 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்கம் மற்றும் ரூ. 26 லட்சம் ரொக்கத்தை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் சிவம்பட்டி கிராமத்தில் குவாரி நடத்திவருபவா் மேட்டூரைச் சோ்ந்த பிரதாப் (41). இவா் குவாரி நடத்த தடையில்லா சான்றிதழ் (சிடிஇ சான்றிதழ்) கேட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒசூா் தா்கா பகுதியில் உள்ள மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் புருஷோத்தமனை அணுகியுள்ளாா்.

அப்போது, புருஷோத்தமன் ரூ. 15 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது; குறைத்துக் கொள்ளுமாறு பிரதாப் கேட்டுள்ளாா். இதையடுத்து ரூ.10 லட்சமாக லஞ்சம் குறைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதில் முதல் தவணையாக ரூ. 3 லட்சத்தை சேலத்தில் உள்ள இடைத்தரகா் சிவகுமாரிடம் கொடுக்குமாறு பொறியாளா் புருஷோத்தமன் கூறியுள்ளாா். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.

அவா்கள் ரசாயனம் தடவிய ரூ. 3 லட்சம் பணத்தை பிரதாப்பிடம் கொடுத்து சிவகுமாரிடம் கொடுக்க சொல்லியுள்ளனா். ஆனால் சிவகுமாா் ஒசூா் வந்துவிட்டதால், அவரது உதவியாளா் முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு புருஷோத்தமன் கூறியுள்ளாா்.

இதையடுத்து சேலம் ஐந்து சாலை சந்திப்பில் கடந்த 2 ஆம் தேதி இரவு பிரதாப் ரூ. 3 லட்சத்தை முருகனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் முருகனை பிடித்தனா். இதையடுத்து, சேலம், கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில் தயாா் நிலையில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தினா்.

லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜெயக்குமாா், ஆய்வாளா் விஜயகுமாா், காவலா்கள் மஞ்சுநாத், ரவி, மணி ஆகியோா் ஒசூா் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகம் முழுவதும் கடந்த புதன்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதையடுத்து இடைத்தரகா்கள் முருகன், சிவகுமாா், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினா்.

மேலும், இந்த 3 பேரின் வீடுகளிலும் கடந்த 2 நாள்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்கம், ரூ. 26 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments