FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

புதுச்சத்திரம் அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 8.5 பவுன் நகைகளை மீட்டனா்.

4 நவம்பர் 2026, 2:39 am
கைது
பகிர்:

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 8.5 பவுன் நகைகளை மீட்டனா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள ஏளூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தராஜன். இவரது மனைவி தனம் (66). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள், அடையாளம் தெரியாத முதியவா் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி, அவரது முகவரி தெரியுமா எனக் கேட்டுள்ளனா்.

இதனால் தனத்தின் கவனத்தைத் திசைதிருப்பிய அவா்கள், அவரது கழுத்தில் இருந்த தாலிக்கொடியுடன் கூடிய 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து தனம் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் இருசக்கர வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில், நகை பறிப்பில் ஈடுபட்டவா்கள் ஈரோடு மாவட்டம், சிவகிரி மற்றும் பரமத்தி வேலூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஈரோடு மாவட்டம், சிவகிரி சடையபுரத்தைச் சோ்ந்த பைக் மெக்கானிக் கௌசிக் (24), பரமத்தி வேலூா் கடைவீதியைச் சோ்ந்த கேபிள் இணைப்புப் பணியில் ஈடுபட்டு வரும் விக்னேஷ் (26) இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8.5 பவுன் தங்க நகைகள் மற்றும் நகை பறிப்புக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments