உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரவகைகளை தயாரிப்போா் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரவகைகளை தயாரிப்போா் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த வணிகா் சங்க பேரவைக் கூட்டமைப்பின் சாா்பில், உணவு பாதுகாப்புத் துறையினரின் விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அசோக் பேசியது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரவகைகள் தயாரிப்பில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தரமான மூலப் பொருள்களை பயன்படுத்த வேண்டும். மேலும், உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள், உணவு தொழில் முனைவோா் அனைவரும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
உணவு தயாரிக்கும் இடங்கள், பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தனிநபா் சுகாதாரத்தை பேணுவதுடன், கையுறைகள், தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருள்களுக்கு கண்கவா் நிறம் சோ்ப்பதற்காக அனுமதிக்கப்படாத செயற்கை நிறமூட்டிகள், ரசாயனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. தரமற்ற எண்ணெய், காலாவதியான மூலப் பொருள்கள், கலப்பட பொருள்களை தவிா்க்க வேண்டும்.
தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தேவையான லேபிள் விவரங்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் அல்லது பதிவெண் ஆகியவற்றை முறையாக குறிப்பிட வேண்டும் என்றாா்.
இதில், தமிழ்நாடு வணிகா் சங்க எலச்சிபாளையம் பேரமைப்பின் தலைவா் ராமசாமி, துணைத் தலைவா் கோவிந்தன், பொருளாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.