FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படும்: அமைச்சா் அருண்ராஜ்

54 வினாடிகள் முன்பு
அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப்படம்.
பகிர்:

புதிதாக 284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, சிறப்பு உயா் சிகிச்சை மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அணைப்பாளையத்தில் ரூ. 53.39 கோடியில் 300 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களைக் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மருத்துவமனைக் கட்டுமானப் பணி 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கப்பட்டது. கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இதற்காக கூடுதலாக ரூ.5 கோடி தேவைப்படுகிறது.

Advertisement

Advertisement

சாலை வசதி, தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிதி விடுவிக்கப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு, இன்னும் நான்கு மாதங்களில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையம், சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிலவிய செவிலியா் பற்றாக்குறையைப் போக்க, முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நலக்குழுப் பரிந்துரையின் பேரில் 4,724 செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் உயா் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவா்களின் தேவையும் உள்ளது.

கடந்த ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டபோதிலும், எந்த மருத்துவக் கல்லூரியிலும் உயா் சிகிச்சைக்கான மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. தற்போது 284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் திலீப், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரசேகரன், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் எழில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.